நான் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு - ரிஷி சுனக் பரபரப்பு தகவல்!
பிரிட்டன் பிரதமர் தேர்தல் குறித்து ரிஷி சுனக் பரபரப்பு கருத்துத் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வந்தார். இவருக்கு போட்டியாக 46 வயதான லிஸ் டிரஸ் களத்தில் உள்ளார்.
ரிஷி சுனக்
தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. களத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
இந்த வாக்கெடுப்பானது வரும் செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெற்று 5 ஆம் தேதி முடிவு அறிக்கப்பட உள்ளது.இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி இணைய வழி ஆய்வு நிறுவனமான 'யூகோவ்' வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
லிஸ் டிரஸ்
ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் முன்னிலையில் இருப்பதாகவும் அவருக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து உள்ள கிராந்தம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிஷி சுனக்,
"சந்தேகமே வேண்டாம், நான் வெற்றி பெறு வாய்ப்புகள் மிகவும் குறைவு" என்று தெரிவித்தார். தனது போட்டியாளரான லிஸ் டிரஸ் பெயரை குறிப்பிடாமல், "அவர் வெற்றி பெற வேண்டும் என சில சக்திகள் நினைக்கின்றன. ஆனால் உறுப்பினர்களுக்கு தேர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் கவனிக்க தயாராக இருக்கின்றனர்" என்று கூறினார். இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால், இங்கிலாந்து முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை பெறுவார். அதே சமயம், லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால், இங்கிலாந்தின் 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.