தைரியத்தைப் பார்த்து வியக்கிறேன் - ஆதரவு தெரிவித்த பிரியங்கா சோப்ரா!
ஈரான் பெண்களின் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம்
ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் மாசாஆமினி என்னும் 22 வயது பெண், தன் குடும்பத்துடன் ஈரானின் தலைநகரமான டெஹ்ரானுக்கு சென்றபோது, கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஈரானியப் பெண்கள் பலரும், ஹிஜாப் அணியாமலும் தங்கள் முடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
வெடிக்கும் போராட்டம்
அதனையடுத்து, ஈரான் போலீஸார், `அவர் மாரடைப்பால் இறந்தார்' என்கின்றனர். தொடர்ந்து, உலகநாடுகளைச் சேர்ந்த பல பெண்கள் தங்களது கூந்தலை வெட்டி, அதை இணையத்தில் வெளியிட்டு ஈரான் பெண்களது போராட்டத்துக்கு வலுசேர்த்தனர்.

இந்நிலையில் நேற்று, நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``திணிக்கப்பட்ட அமைதிக்கு பிறகான குரல்கள் எரிமலைபோல் வெடிக்கும். அவற்றைத் தடுக்க முடியாது. உங்களது தைரியத்தைப் பார்த்து வியக்கிறேன்.
நடிகை ஆதரவு
உங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து, ஆணாதிக்க சமுதாயத்தை எதிர்த்து மற்றும் உங்கள் உரிமைக்காகப் போராடுவது எளிதல்ல. நாம் அனைவரும் அவர்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். மேலும் அவர்களுடன் இணைய வேண்டும்.
நான் உங்களுடன் இருக்கிறேன். பெண்கள், வாழ்க்கை, விடுதலை" என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது #WomanLifeFreedom என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.