நடத்தையில் சந்தேகம்; மனைவி வெட்டி கொலை - சரணடைய சென்ற கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!
மனைவியை வெட்டி கொலை செய்து சரணடைய சென்ற கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மனைவி கொலை
தெலுங்கானா மாநிலம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்த தீப என்ற பெண்ணுக்கும், அடிலாபாத் புறநகர் பகுதியான பங்கர் குடவை சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தையில் கணவன் அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது பெற்றோருக்கு தீபா தகவல் தெரிவித்தபோது, திருமண புதிதில் இப்படித்தான் இருக்கும் சிறிது நாட்கள் பொறுத்துக்கொள்ளுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் கணவன் அருணின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்க, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தீபாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் மாமியார் வீட்டிற்கு வந்த கணவன் அருண் 'மனைவியை இனிமேல் கொடுமை படுத்தாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து தனது வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னரும் தீபாவை கொடுமை படுத்தியுள்ளார் அருண்.
நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு, இதில் ஆத்திரமடைந்த அருண் தீபாவின் தலையை சுவற்றில் மோதியுள்ளார். இதில் தீபாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்துக் கொண்டிருந்த தீபாவை கத்தி எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அருண்.
கணவன் பலி
இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பைக்கை எடுத்து காவல் நிலையத்தில் சரணடைய சென்றுள்ளார் அருண். இதை அறிந்த அருணின் தந்தை போன் செய்து அவரை வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த அருண் முன்னால் சென்ற லாரியின் மீது மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதில் தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அருண். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கணவன் மனைவி 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மனைவியை கொலை செய்ய உதவியதாக அருணின் பெற்றோர் ஜெயவந்த் ராவ், லட்சுமி ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.