மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவர்; பின்னர் செய்த காரியம் - ஈரோட்டில் பரபரப்பு!
மனைவியை சுத்தியலால் அடித்து கொன்று விட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதி மரணம்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகேயுள்ள அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்த தம்பதி ஈஸ்வரன் (55) - கனிமொழி. இந்த தம்பதியினரின் கார்த்தி (27) என்ற மகன் அசாம் மாநிலத்தில் பைலட்டாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் பெற்றோரிடம் பேசுவதற்காக கார்த்தி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இருவருமே போனை எடுக்கவில்லை. இதனால் வீட்டின் அருகே உள்ள உறவினர்களை தொடர்புகொண்டு அங்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
படுக்கையறையில் கனிமொழி ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், சமையலறையில் ஈஸ்வரன் கழுத்தில் ரத்தம் வழிந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்துள்ளார். உடனடியாக அவர்கள் இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஈஸ்வரன் தனது மனைவி கனிமொழியை சுத்தியலால் நெற்றி பகுதியில் அடித்துள்ளார். இதனால் ரத்தம் வழிய அதே இடத்தில் கனிமொழி இறந்துவிட்டார். பின்னர் சமையலறைக்கு சென்ற ஈஸ்வரன், கத்தியால் தனது கழுத்தை அறுத்துள்ளார். ஆனால் உயிர் போகாததால் ரத்தம் வழிய வழிய தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மேலும், ஈஸ்வரனுக்கு கடன் தொல்லை இருந்ததா? அல்லது குடும்பத்தகராறா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan