நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர் - நடத்தை சந்தேகத்தால் கொடூரம்!
நடுரோட்டில் இளம்பெண்ணை, கணவர் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடத்தையில் சந்தேகம்
பெங்களூரு, ராமையா லே-அவுட்டை சேர்ந்தவர் மோகன். இவர் ஹெப்பகோடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கங்கா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கங்காவுக்கும், மோகனுடன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நண்பர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மோகன் மனைவியின் மீது சந்தேகத்தில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
எனவே, கங்கா குழந்தையுடன் தனியாக சென்று வசித்துள்ளார். தொடர்ந்து மோகன் அடிக்கடி மனைவி வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்து வந்துள்ளார். திடீரென மனைவி வீட்டுக்கு சென்றபோது, அவர் குழந்தையை காண்பிக்க முடியாது என்று தகராறு செய்துள்ளார்.
மனைவி கொலை
இதனால் ஆத்திரமடைந்த மோகன், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த கங்காவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, கத்தியை எடுத்து 7 முறை வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.