நான் மகள்களுடன் வாழனும் - குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என ரஷ்ய பெண்ணின் கணவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
குகையில் மகள்கள்
கர்நாடகா, கொகர்னா வனப்பகுதியில் இருந்த மலைக்குகையில் ரஷ்ய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்ற போது அங்கிருந்த குகைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. மற்றொரு குழந்தையும், அதன் தாயாரும் அருகில் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களை எழுப்பி விசாரித்ததில், அப்பெண்ணின் பெயர் நினா குதினா(40) என்று தெரிய வந்தது. ரஷ்யாவை சேர்ந்த் நினா 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரது விசா காலாவதியான பிறகும் தொடர்ந்து இந்தியாவிலேயே வசித்து வந்துள்ளார்.
தற்போது அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு துமகுரு பெண்கள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நினா குடினாவின் கணவர் இஸ்ரேலை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் டிரார் கோல்ட்ஸ்டெயின் என்பதும் தெரியவந்துள்ளது.
கணவர் விருப்பம்
அவர் இதுகுறித்து கூறுகையில், நினா குடினாவை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் பார்த்தேன். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இந்தியாவில் 7 மாதங்கள் வாழ்ந்தோம். பிறகு உக்ரைனில் அதிக நாட்கள் வாழ்ந்தோம்.
எனது மகள்களை பார்க்க கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவுக்கு வந்து செல்கிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நினா குடினா என்னிடம் எதுவும் சொல்லாமல் கோவாவில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. அவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்து இருந்தேன். தற்போது அவர் குகையில் தங்கியிருந்தது தெரியவந்தது. மகள்களை பார்க்க கர்நாடகா சென்றேன். ஆனால், சிறிது நேரம் மட்டுமே நேரம் செலவிட நினா குடினா அனுமதித்தார். எனது மகள்களை என்னுடன் அழைத்து செல்ல விருப்பம் உள்ளது.
பல மாதங்களாக, நினா குடினாவுக்கு பணம் அனுப்பி வந்தேன். தேவையானதை வாங்கும் திறன் நினா குடினாவுக்கு உள்ளது. எனது குழந்தைகள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன். ரஷ்யாவுக்கு சென்று விட்டால், அவர்களை மீட்பது கடினமாகும் எனத் தெரிவித்துள்ளார்.