அந்த சத்தம்.. மீண்டும் கேட்கும் திறனை பெற்ற கணவர் - மனைவியால் நடந்த அதிசயம்!
கணவருக்கு கேட்கும் திறனை பெற்றுத்தந்த மனைவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்திய தம்பதி
அபுதாபியில் வசித்து வரும் இந்திய தம்பதியினர் ஹுசைன் (52) - தஸ்லிபானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஹுசைன் தனது 2 வயதில் இருந்து செவித்திறனை இழந்துள்ளார். இந்நிலையில் தனது கணவருக்கு மீண்டும் காது கேட்க வைக்க வேண்டும் என மருத்துவ ஊழியரான தஸ்லிபானு விரும்பினார்.
அதற்காக பைலேட்டரல் காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறனை கொண்டு வர நினைத்தார். இந்த அறுவை சிகிச்சை உட்காதில் (காக்கிலியா) சிறு மின்னணு உபகரணம் பொருத்தப்பட்டு செய்யப்படுகிறது. இதற்காக சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனந்த கண்ணீர்
அதாவது காதுக்கு பின்னால் உள்ள எலும்பில் சிறிய துளை ஏற்படுத்தப்பட்டு அதில் உபகரணம் தோலின் உள்ளே பொருத்தப்படுகிறது. இந்நிலையில் கணவருக்கு அறுவை சிகிச்சை நடத்த தஸ்லிபானு ஏற்பாடு செய்தார். இதனையடுத்து அபுதாபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் முகம்மது ஹுசைனை திரும்பி நிற்க வைத்து தஸ்லிபானுவை ஏதாவது பேசுங்கள் என மருத்துவர்கள் சமிஞ்சையில் கூறினர். அவர் தனது செல்லப்பெயரான 'பானு' என உச்சரித்தார். அப்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சத்தத்தை கேட்ட ஹுசைன் ஆனந்த கண்ணீர் வடித்து திரும்பிப் பார்த்தார். இதனை பார்த்த தஸ்லிபானுவும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.