செப்டிக் டேங்கில் கிடந்த மனித எலும்புக்கூடு - அலறியடித்து ஓட்டம் பிடித்த பணியாளர்கள்
தென்காசியில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய சென்ற போது மனித எலும்பு கூடு இருந்ததை கண்டு பணியாளர்கள் பதறிய நிலையில் ஓட்டம் பிடித்தனர்.
செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய இறங்கிய பணியாளர்கள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட இலத்துார் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று இலத்துார் பகுதியில் உள்ளது.
லட்சுமணன் கடந்த சில வருடங்களாக வேலை விஷயமாக வெளியூரில் தங்கி வசித்து வருகிறார். இதன் காரணமாக அவரது வீடு நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது சொந்த ஊருக்கு வருகை தந்துள்ள லட்சுமணன், தனது வீட்டை பராமரிப்பு செய்து வாடகைக்கு விட முடிவு செய்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
மனித எலும்பு கூட்டை கண்டு மிரண்டு ஓட்டம்
அப்பொழுது அவரது வீட்டில் இருந்த செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது, அதற்குள் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன மற்றும் வேலை ஆட்கள், உடனே சம்பவம் குறித்து இலத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில், விரைந்து வந்த இலத்துார் போலீசார் செப்டிக் டேங்கில் கிடந்த எலும்புக்கூட்டை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து இலத்துார் கிராம நிர்வாக அலுவலர் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தற்போது செப்டிக் டேங்கிற்குள் கிடந்த நபர் ஆணா? பெண்ணா? கொலை செய்யப்பட்டு செப்டிக் டேங்கிற்குள் வீசப் பட்டாரா, இறந்து எவ்வளவு நாட்கள் இருக்கும்? அந்தப் பகுதியில் ஏதேனும் நபர்கள் காணாமல் போய் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.