100ரூபாய் கருணாநிதி நினைவு நாணயம் - வாங்குவது எப்படி?
100ரூபாய் கருணாநிதி நினைவு நாணயம் எங்கே வாங்குவது அதன் விலை என்ன என்பது குறித்த தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியை போற்றும் வகையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று(18.08.2024) மாலை நடைபெற்ற விழாவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இந்த நாணயத்தில் ஒரு பக்கத்தில் இந்தியா அரசு சின்னமும் அதன் கீழ் 100 ரூபாய் என பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் கருணாநிதியின் புகைப்படத்துடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. BIRTH CENTENARY OF KALAINGAR M KARUNANIDHI என ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது.
விலை
இந்த நாணயங்கள் புழக்கத்துக்கு வருமா என திமுகவினர் எதிர்பார்த்தப்படி உள்ளனர். இந்நிலையில் இன்று நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம், திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும் என்றும், இந்த 100 ரூபாய் நாணயத்தை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் 10,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 100 ரூபாய் நாணயம்தான். ஆனால் மதிப்பு 10,000 ரூபாய். மதிப்பே கிடையாது. நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அமைச்சர் காந்தி நான் 1 லட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவர் 1 லட்சம் என்ன, 10 லட்சம்கூட கொடுத்து வாங்கிக் கொள்வார் என கூறினார்.