கருணாநிதி நாணயத்தில் ஹிந்தி; ஸ்டாலின் எதிர்த்தாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுகவும் பாஜகவுக்கும் ரகசிய உறவு உள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 90% பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. பாக்கி இருந்த 10% பணிகளை திமுக அரசால் 6 மாத காலத்தில் நிறைவு செய்திருக்க முடியும். ஆனால் அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் 3 ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு தற்போது முடித்திருக்கிறது.
மு.க.ஸ்டாலின்
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகளை நிறைவேற்றாத இந்த 2.5 ஆண்டு காலம் விவசாயிகளுக்கு நீர் கிடைக்காமல் இருந்ததற்கு திமுக அரசு தான் காரணம். மேலும், கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. திமுக ஆட்சி அமைத்தது முதல் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் இந்தி வருகிறது என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு தெரியும். அதற்கு உடன்பட்டுதான் நாணயத்தை வெளியிடுகிறார். பா.ஜ.க கூட்டணியில் இருந்த போது கூட அவர்களை அழைக்காமல் எம்.ஜி.ஆர் நாணயத்தை நாங்களே வெளியிட்டோம் இவர்கள் ஏன் ராஜ்நாத் சிங்கை அழைத்தார்கள்?
தமிழ், தமிழ் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஏனென்றால் அவரின் தந்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் நாணயத்தை வெளியிடுகிறார்கள்.
ராகுல் காந்தி
ஆகஸ்ட்15ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம், நீங்களும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொன்ன உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்பது திமுகவின் விருப்பம். ரூ.100 நாணயம் வெளியிட வேண்டும் என நினைப்பது திமுகவின் விருப்பம். ஆனால் வெளியிடுவது யார் என்பதுதான் கேள்வி? ஏன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அழைத்து ரூ.100 நாணயத்தை வெளியிட்டு இருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.