நெருங்கும் தைப்பூசம் விழா.. முருகனுக்கு விரதம் இருக்கும் முறை - கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
தைப்பூசத்தில் முருகனுக்கு விரதம் இருக்கும் முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தைப்பூசம்
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம் ஆகும். தை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே தைப்பூச நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது.
தைப்பூசத்தில் முருகனுக்கு விரதம் இருக்கும் முறை குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.பக்தர்கள் தைப்பூசத்திற்கு முந்தைய 48 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்.இது மண்டல விரதம் என்று அழைக்கப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் 48 நாட்களும் முடிந்தால் ஒருவேளை உணவைத் தவிர்த்து விரதம் இருக்கலாம்.
அப்படி முடியாதவர்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.ஆனால் விரதம் இருப்பவர்கள் 48 நாட்களும் கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். தினமும் கோவிலுக்குச் செல்ல முடிந்தவர்கள் செல்லலாம்.விரத நாளில் வீட்டைச் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.
விரத முறை
விரத நாட்களில் முருகப் பெருமானுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிற மலர்களால் அலங்கரித்து பூஜை செய்வது மிகவும் சிறப்புப் பெற்றது.48 விரத நாள்களில் முருகனுக்கு விளக்கேற்றி வைத்து முருகனின் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்கு மந்திரங்களைச் சொல்லி விரதம் கடைப்பிடிக்கலாம்.
பெண்கள் மாதவிடாய் காலத்திலும் விரதத்தைத் தொடரலாம்.பூஜை அறைக்குச் செல்லாமல் வெளியிலிருந்தே முருகனை மனதார நினைத்து, விரதத்தைத் தொடரலாம்.