புத்தாண்டு உறுதிமொழிகள்; ஏன் வருடம் முழுக்க தொடர முடிவதில்லை?
புத்தாண்டு உறுதிமொழிகளை வருடம் முழுவதும் எப்படி தொடர்வது என்பதை பார்க்கலாம்.
புத்தாண்டு உறுதிமொழி
ஒவ்வொரு புத்தாண்டின் போதும் உறுதிமொழி எடுக்கும் பழக்கத்தை உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பின்பற்றுகின்றனர்.
வருடம் முழுவதும் சிக்கனமாக இருந்து பணத்தை சேமிப்பேன், தினமும் ஜிம் செல்வேன், அதிகாலையில் எழுந்து கொள்வேன். புத்தகம் வாசிப்பேன், மது, புகை போன்ற தீய பழக்கங்களை கை விடுவேன். சமூக வலைதளம் பயன்படுத்துவதை குறைப்பேன் என பலரும் பலவிதமான உறுதிமொழிகளை எடுப்பது உண்டு.
தோல்விக்கான காரணங்கள்
ஆனால் உறுதிமொழி எடுக்கும் பெரும்பாலான மக்கள் அதை இறுதி வரை கடைப்பிடிப்பார்களா என்றால் வெகு சிலரே அதை செய்வார்கள். பாதிக்கும் மேற்பட்டோர் முதல் வாரத்தில் உறுதிமொழியை கை விட்டு விடுவார்கள்.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத உறுதிமொழிகளை எடுப்பது; உதாரணம் யூடியூப் சேனல் தொடங்கி முதல் மாதத்தில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ள சேனல் ஆக மாற்றுவேன் என உறுதிமொழி ஏற்பார்கள். முதல் 2 வீடியோவுக்கு எதிர்பார்த்த அளவு வியூஸ் வராத போது சலிப்படைந்து வீடியோ போடுவதையே நிறுத்தி விடுவார்கள்.
தெளிவில்லாத அல்லது பொதுவான உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது; உதாரணத்திற்கு நான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வேன்.
அளவுக்கு அதிகமான உறுதிமொழிகளை எடுப்பது, சுய விருப்பத்தின் பேரில் இல்லாமல் எல்லாரும் எடுக்கிறார்கள் என சமூக அழுத்தத்தால் உறுதிமொழி ஏற்பது, தெளிவான திட்டமிடல் இல்லாதது, கண்காணிக்காமல் இருப்பது ஆகியவை உறுதிமொழிகளை கைவிடுவதற்கு காரணமாக அமைகிறது.
உறுதிமொழிகளை பின்பற்ற
SMART இலக்குகள்:
S (Specific) குறிப்பிட்டவை : என்ன அடைய வேண்டும் என்பதை தெளிவாக வரையறுக்கவும்.
M (Measurable) அளவிடத்தக்கவை: முன்னேற்றத்தை அளவிடக்கூடிய அளவுகோல்களை நிர்ணயிக்கவும்.
A (Achievable) சாத்தியமானவை : சவாலானதாக இருந்தாலும், சாத்தியமான இலக்குகளை நிர்ணயிக்கவும்.
R (Relevant) தொடர்புடையவை: இலக்குகள் உங்கள் மதிப்புகள் மற்றும் ஆர்வங்களுடன் பொருந்த வேண்டும்.
T (Time-bound) நேர கட்டுப்பாடுடையவை: அவசர உணர்வை ஏற்படுத்த நேரக் கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கவும்.
உறுதிமொழிகளை எழுதுதல்
உறுதிமொழிகளை ஒரு நோட்டில் எழுதவும். அதை தங்கள் கைப்பட எழுதுவது ஒரு கடமை உணர்வை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.
ஆரோக்கியமாக வாழ்வேன் என பொதுவான உறுதிமொழி ஏற்பதை விட ஜங் புட்ஸ் சாப்பிட மாட்டேன், தினமும் 3 வேளை உணவு உண்பேன். 9 மணிக்குள் இரவு உணவு உண்பேன் என தெளிவான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.
பெரிய இலக்குகளை சிறியதாக பிரித்து கொள்ளவும் ஒரு வருடத்தில் 10 புத்தகம் படிப்பது உறுதிமொழி என்றால் மாதத்திற்கு 1 புத்தகம் படித்து முடிப்பேன் என இலக்குகளை பிரித்து கொள்ள வேண்டும். அதிக பக்கம் கொண்ட புத்தகங்களுக்கு கூடுதல் 10 நாட்கள் ஒதுக்க வேண்டும்.
இலக்குகளை கண்காணிக்கவும்; தினமும் உடற்பயிற்சி செய்வது இலக்கு என்றால் டைரி அல்லது மொபைல் ஆப்பில் தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்துள்ளோம் என தெளிவாக எழுதவும்.
இலக்கின் முக்கியத்துவம்
சிறு வெற்றிகளை கொண்டாடுங்கள். ஒரு வருடத்தில் 10 புத்தகம் படிப்பது உறுதிமொழி என்றால் ஒரு திட்டமிட்டப்படி ஒரு மாதத்தில் ஒரு புத்தகத்தை படித்து முடித்து விட்டால் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளவும்.
பழக்கமாக மாற்றுங்கள் தினமும் அதிகாலையில் 6 மணிக்கு எழுவது இலக்கு என்றால் ஆழ்ந்த தூக்கத்திற்கு தயார் படுத்தி கொண்டு செல்போனை ஓரமாக வைத்து இரவு முன்னரே உறங்கி விடுங்கள். 21 நாட்கள் செய்தால் சில செயல்கள் பழக்கமாகிவிடும் என்பார்கள். முதல் சில நாட்களுக்கு அலாரம் வைத்து 6 மணிக்கு எழுந்து விடுங்கள். நாட்கள் செல்ல செல்ல 6 மணிக்கு அலாரம் இல்லாமல் 6 மணிக்கு விழித்து கொள்வீர்கள்.
இலக்கின் முக்கியத்துவத்தை நினைவில் கொள்ளுங்கள்: மாதம் 10,000 சேமிக்க வேண்டும் என்பது இலக்கு என்றால் அந்த பணம் மூலம் இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற காரணத்தை நினைவில் கொள்ளுங்கள்.
நெகிழ்வுதன்மை: தினமும் உடற்பயிற்சி செய்வது இலக்கு என்றால் உடல்நல பாதிப்பு காரணமாக இரு நாட்கள் ஜிம் செல்ல முடியாவிட்டால் அதை ஏற்று கொண்டு உடல்நலன் சரியானதும் மீண்டும் வழக்கம் போல் தினமும் உடற்பயிற்சி கூடம் செல்ல வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று முடிவு செய்வதைவிட, தன்னால் எந்த அளவிலான உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
அளவுக்கு மீறிய உடற்பயிற்சிகளைச் செய்தால், உடல் வலியால் 2 நாட்களில் வேண்டாம் என்ற மனநிலை வந்துவிடும். அதுவே, தினசரி 30 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதைச் வழக்கமாக செய்து வந்தால் அதன் பலன்களைக் காணும்போது, அந்த ஆர்வம் அதிகரிக்கும்.
எதிர்மறை விளைவு
புத்தாண்டு உறுதிமொழிகளை வெற்றிகரமாகப் பின்பற்றுவதால் நன்மைகள் ஏற்படுவதைப் போலவே, அதைச் சரியாகப் பின்பற்றாமல் தவிர்ப்பதால் எதிர்மறை விளைவுகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து சில ஆண்டுகளாக ஒரு உறுதிமொழியை எடுத்து அதை ஓவ்வொரு ஆண்டும் பின்பற்ற தவறினால் அது மனதளவில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையை குறைத்து விடும். தன்னை தோல்வியின் அடையாளமாக பார்க்க கூடும். புத்தாண்டு உறுதிமொழிகள் சரியானவையாக இல்லையென்றால், அது நன்மைகளைவிட பின்விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தும்.