உங்கள் பெயரில் எத்தனை சிம் உள்ளது என கண்டுபிடிப்பது எப்படி? அரசு வெளியிட்டுள்ள இணையதளம்
ஒருவர் பயன்படுத்தும் சிம்கார்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மத்திய அரசு சட்டமியற்றியுள்ளது.
சிம் கார்டு
சில தொலைதொடர்பு நிறுவனங்கள் வியாபார யுக்திக்காக சிம் கார்டுகளை இலவசமாக வழங்குகின்றன. இலவசமாக கிடைப்பதால் பலரும் சிம் கார்டுகளை வாங்கி குவிக்கின்றனர். தற்போது தொலைபேசி எண்கள் மூலம் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறுகின்றன.
குற்றச்செயலை செய்து விட்டு சிம் கார்டுகளை தூக்கி வீசி விடுகின்றனர். தற்போது இதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு தொலைத்தொடர்புச் சட்டம் 2023 என்ற சட்டமியற்றியது. இதன்படி ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே தனது பெயரில் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்ற பதற்றமான பகுதிகளில் 6 சிம் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது.
அபராதம்
ஒருவர் அதிகமான சிம்கார்டுகள் வைத்திருந்து முதல் முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சிம் கார்டு மூலம் சட்ட விரோத செயல்கள் நடைபெற்றால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது 50 லட்சம் அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
ஒருவேளை உங்கள் பெயரில் வேறொருவர் சிம் கார்டு வாங்கியிருப்பது தெரிய வந்தால் உடனே புகார் அளிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக அரசு www.sancharsaathi.gov.in என்ற புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் உங்கள் 10 இலக்க செல்போன் எண்ணை உள்ளிட்ட பின் அதற்கு பிறகு வரும் ஓடிபியை பதிவு செய்த பின் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்ற தகவல் காட்டப்படும்.