முதல் ஆளாக உள்ளே இறங்கிய கமல்ஹாசன் - குணா குகையை கண்டுபிடித்தது எப்படி?
கமல்ஹாசன் எப்படி குணா குகையைக் கண்டுபிடித்தார் என்பது குறித்து அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராசி அழகப்பன் பேசியுள்ளார்.
குணா குகை
மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் நடிகர் கமல்ஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் குணா படம் குறித்தும், படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்ட குகை குறித்தும் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் எப்படி குணா குகையைக் கண்டுபிடித்தார் என்பது குறித்து அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராசி அழகப்பன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது "குணா படத்தில் கமல் சாரின் கதாபாத்திரம் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல இருப்பதால், குளிர் பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்தோம்.
அதற்காக முதலில் குணசீலம் என்ற பகுதியில் எடுக்க முடிவு செய்து, பின்னர் கொடைக்கானலுக்கு மாறியது. இதனையடுத்து கமல் சார் நான் மற்றும் சந்தான பாரதி உள்ளிட்டோர் லொக்கேஷன் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றோம். அங்கு ஒரு முஸ்லிம் டிரைவர்தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார். திடீரென ஒரு இடத்தில் சடாரென்று நில்லுங்கள் அங்கே செல்லாதீர்கள்.
நடிகர் கமல்ஹாசன்
விழுந்தால் எலும்பு கூட கிடைக்காது என்று அந்த ட்ரைவர் எச்சரித்தார். அவர் சொன்னவுடன் எல்லோரும் அங்கிருந்து சென்றுவிடலாம் என்று கிளம்ப, கமல் சார் மட்டும் கிளம்பவில்லை.
அவரை பொருத்தவரை யாராவது ஒன்று முடியாது என்று சொன்னால், அதை முடித்துக் காட்ட வேண்டும். அவர் அந்த ஆபத்தான இடத்தை நோக்கி சென்று உள்ளே எட்டிப்பார்த்தால் கும்மிருட்டாக இருந்தது. பின்னர் ஒரு கல்லை எடுத்து உள்ளே போட்டார். அந்த கல் 25 நொடிகள் டிராவல் செய்து அந்த குகைக்குள் சென்று விழுந்தது. உடனே கமல் சார் அந்த முஸ்லிம் டிரைவரிடம் "குகை மிகப்பெரியதாகத்தான் இருக்கிறது.
ஆனால் நாம் அதன் தரையைத் தொட்டு படம் எடுப்போம்" என்றார். இதைகேட்டு அந்த டிரைவர் அதிர்ந்து போனார். முதற்கட்டமாக குணா குகையின் வெளியே ஒரு பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் கயிறு கட்டினோம். ஆனால் கயிறைப்பிடித்து உள்ளே இறங்க எல்லோரும் பயந்தார்கள். அப்போது கமல் சார்தான் முதல் ஆளாக உள்ளே இறங்கினார். அதன் பின்னர்தான் நாங்கள் உள்ளே இறங்கினோம்" என்று தெரிவித்துள்ளார்.