இதை கேள்வி கேளுங்கள் - 1 மாநிலத்தில் தான் ஆட்சி எப்படி இவ்வளவு நிதி? அண்ணாமலை கேள்வி
தேர்தல் பத்திர விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஒளிப்பதற்கு ஒன்றுமே இல்லையே, எல்லாமே வெளிப்படையாகத்தானே இருக்கிறது என்றார்.
தேர்தல் பத்திரங்கள்
நாட்டை உலுக்கியுள்ளது தேர்தல் பத்திர விவகாரம். எஸ்.பி.ஐ வங்கிக்கு கிடுக்குப்புடி போட்ட உச்சநீதிமன்றம், தற்போது தேர்தல் பத்திர விவகாரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இது தொடர்பான தகவல் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதிகபட்சமாக நாட்டில் ஆளும் கட்சியான பாஜக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது.
அதே போல மேற்குவங்கத்தை சேர்ந்த மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 1000 கோடி ரூபாயும், திமுக கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பாக பெரும் புகைச்சல் இந்திய அரசியலில் எதிரொலித்துள்ள நிலையில், அது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக இவ்வளவு நிதி
அவர் பேசியது வருமாறு, தேர்தல் பத்திர விவகாரத்தில் ஒளிப்பதற்கு ஒன்றுமே இல்லையே, வெளிப்படையாகத்தானே இருக்கிறது. 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறோம், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வந்துள்ள நிதி இவ்வளவு.
ஆனால், ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்யும் திமுக இவ்வளவு நிதி பெற்றுள்ளதே, எப்படி இவ்வளவு வந்தது? அதை கேள்வி கேட்க வேண்டும். திமுகவின் தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான். எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை.
யாரெல்லாம் திமுகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்தார்கள் என்று நோண்டிப் பாருங்கள். பாஜக எப்போதும் வெளிப்படைத்தன்மையை வரவேற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.