பிரிட்ஜில் இருந்த மாட்டிறைச்சி; 11 வீடுகள் இடித்து தரைமட்டம் - அதிர்ச்சி சம்பவம்!
மாட்டு கறி இருந்த 11 பேரின் வீடுகள் இடித்து சேதம் செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
மாட்டிறைச்சி
மத்தியப் பிரதேசம், மாண்ட்லாவில் அதிகம் பழங்குடியினர் வசித்து வரும் பகுதியாகும். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு சட்ட விரோதமாக மாட்டுக்கறி வர்த்தகம் நடத்துபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், மண்ட்லா அருகில் உள்ள பைன்வாஹி என்ற இடத்தில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக பசுமாடுகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த இடத்துக்கு போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
அங்கு இறைச்சிக்காக 150 மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மீட்ட அதிகாரிகள் மாடுகள் கட்டி வைத்திருந்தவர்களின் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அவர்களின் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் இறைச்சி இருந்தது.அந்த இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை சோதனை செய்த போது அவை மாட்டு இறைச்சி என்று தெரியவந்தது.
வீடுகள் இடிப்பு
இதை தொடர்ந்து, பசுமாடுகளை இறைச்சிக்காக கட்டி வைத்திருந்த மற்றும் வீட்டில் இறைச்சியை மறைத்து வைத்திருந்த 11 பேரின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளினர். அந்த வீடுகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில், ''குற்றவாளிகளின் வீட்டில் ஒரு அறையில் மாட்டுத் தோல், கொழுப்பு, எலும்புகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மத்தியப் பிரதேசத்தில் பசுவதையில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.