80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் செய்த கொடூரம்
80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூரில் 80 வயதான மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
80 வயது மூதாட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி, கணவர் உயிரிழந்த பின் மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் மகள் வீட்டிலிருந்து வெளியேறிய இவர், ஓசூர் பேருந்து நிலையத்தில் தங்கி யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்த இளைஞர் ஒருவர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதாக கூறி, தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி வனப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பிறகு அந்த மூதாட்டியை அங்கேயே விட்டு அந்த இளைஞர் தப்பி சென்றுள்ளார். அப்போது அந்த வழியே சென்ற பொதுமக்கள் மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
35 வயது இளைஞர்
சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பாகலூர் அடுத்த உளியாளத்தை சேர்ந்த வேன் டிரைவர் லட்சுமணன்(35) என்பது தெரிய வந்தது.
இவரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, தப்பியோட முயன்றதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.