இப்படியெல்லாம் இருப்பாங்களா? போர் நடுவே வீட்டின் வாடகை கேட்டு நச்சரிக்கும் நபர்!!
ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணின் வீட்டு உரிமையாளர், வாடகைதான் தனக்கு முக்கியம் என்று கடத்தப்பட்ட பெண்ணின் நண்பரிடம் தெரிவித்துள்ளதாக செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
காஸா நகரில் கடந்த 7-ஆம் தேதி திடீரென ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதலை துவங்கினர். அப்போது முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே பெரும் போர் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இரு தரப்பும் காஸா நகரை மையமாக வைத்து இந்த தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி உள்ளனர்.
முன்னதாக ஹமாஸ் படையினர் பல பொதுமக்களை பிணை கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். அதில், 250-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவம் மீட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிணை கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களில் ஒருவர் தான் 27 வயதான இன்பர் ஹமன் என்ற இளம் பெண். இவர் மேற்படிப்பிற்காக தனது ஆண் நண்பரான நோம் அல்லான் என்பவருடன் அந்நகரில் தனியார் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இன்பர் ஹமன் ஹமாஸ் படையினர் பிடித்து வைத்து இருப்பதால், கடந்த மாதத்திற்கான வீட்டு வாடகை அவர்கள் செலுத்தவில்லை என தெரிகிறது.
மறுக்கும் உரிமையாளர்
இதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் வீட்டின் வாடகையை கேட்டு நோம் அல்லானுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் வீடு வாடகை செலுத்துங்கள் அல்லது வீட்டை காலி செய்து விடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை நோம் அல்லானின் தந்தை Screenshot எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
50 வயதை கடந்துள்ள தான் தன் வாழ்நாளில் இப்படி ஒரு நபரை எதிர்கொண்டது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டின் உரிமையாளர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.