'வரலாறு பார்த்துக் கொண்டிருக்கிறது' போரை நிறுத்த அழைப்பு விடுங்கள் - ஹாலிவுட் நடிகர்கள் பைடனுக்கு கடிதம்!

Joe Biden Israel Hollywood Israel-Hamas War
By Jiyath Oct 23, 2023 07:55 AM GMT
Report

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக ஹாலிவுட் நடிகர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. 

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல்-ஹாமாஸ் போர் உச்சமடைந்துள்ளது.

இந்நிலையில் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சூசன் சரண்டன், கிறிஸ்டன் ஸ்டீவர்ட், குயின்டா புருன்சன், ரமி யூசுப், ரிஸ் அகமது மற்றும் மஹர்ஷலா அலி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் "உங்கள் நிர்வாகத்திடமும், உலகில் உள்ள அனைத்து தலைவர்களிடமும், புனிதமான இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். சிறிதும் தாமதமின்றி போர் நிறுத்ததுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். காஸா மீதான குண்டுவெடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்கவும் உங்களை வலியுறுத்துகிறோம்.

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் குட்டி நாடு; வெறும் 14 கி.மீ பரப்பளவு - எங்குள்ளது தெரியுமா?

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் குட்டி நாடு; வெறும் 14 கி.மீ பரப்பளவு - எங்குள்ளது தெரியுமா?

ஹாலிவுட் நடிகர்கள் கடிதம்

நமது எதிர்கால சந்ததியினரிடம், கொடூரமான இந்தப் போரின் காலத்தில், நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எதுவுமே செய்யாமல் மவுனமாக இருந்தோம் எனச் சொல்ல விரும்பவில்லை. காஸாவில் இருக்கும் பாதி மக்கள் தொகையான இரண்டு மில்லியன் குடியிருப்பாளர்கள் குழந்தைகள், மற்றும் மூன்றில் இரண்டு பங்கு அகதிகள், அவர்களது சந்ததியினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

மனிதாபிமான உதவி அவர்களை விரைவில் சென்று சேர அனுமதிக்கப்பட வேண்டும். கடந்த ஒன்றரை வாரத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனசாட்சி உள்ள எந்தவொரு நபருக்கும் இது பேரழிவு என்று தெரியும். எந்த நம்பிக்கையாக இருந்தாலும், இனம் எதுவாக இருந்தாலும் அனைத்து உயிர்களும் புனிதமானவை என்பதை நாங்கள் நம்புகிறோம். பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்.

உயிரைக் காப்பாற்றுவது ஒவ்வொருவரின் தார்மீக கட்டாயமாகும். ஐ.நாவின் அவசரகால நிவாரண தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் சொன்னதைப்போல ‘வரலாறு பார்த்து கொண்டிருக்கிறது’ என்பதை நினைவில் கொள்ளுமாறும் தெரிவித்துக்கொள்கிறோம் . மனிதாபிமான உதவிகள் அவர்களை விரைவாக சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நடக்கும் இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.