நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் - சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!
எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியில், ‘அதிமுகவின் தலைமை பதவியை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள்
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது இவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

அத்துடன் இவர், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அதிமுகவின் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில், ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்; அம்மா அவர்களால் அடையாளம் காணப்பட்ட மாண்புமிகு ஐயா ஓபிஎஸ் கழகத்தின் ஒற்றை தலைமை ஏற்று வழி நடத்திட வாருங்கள்’ எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக முன்னாள் அதிமுக சேர்மன் சுப்பையா தலைமையிலான ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.