யானை அகால மரணம்..ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல - வெளியான எச்சரிக்கை!
நிர்வாகத் திறமையின்மையின் காரணமாக கோவில் யானை உயிரிழந்தால் அது மக்களுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையாகும் .உடனடியாக சாந்தி பரிகார பூஜை செய்ய வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
யானை மரணம்
இதுதொடர்பாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பழனி அருள்மிகு வன்னி விநாயகர் கோவில் அருகில் உள்ள யானை சரஸ்வதி மற்றும் குன்றக்குடி அருள்மிகு சண்முக நாதர் திருக்கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
வன்னி விநாயகர் யானை சரஸ்வதி இறந்தது கூட வயது மூப்பு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக இறந்துள்ளது. குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி இறந்தது சாதாரண விஷயம் அல்ல இது ஒரு அகால மரணம்.
ஒரு நாட்டில் தேர் குடை சாய்வது, கொடிமரம் பற்றி எரிவது, பட்டத்து யானை, கோவில் யானை அகால மரணம் அடைவது ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல என்பது முன்னோர் வாக்கு. அதிலும் கவனக்குறைவாகவோ! நிர்வாகத் திறமையின்மையின் காரணமாக கோவில் யானை உயிரிழந்தால் அது மக்களுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையாகும்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஒன்றரை அடி விநாயகரை நிறுவி வழிபாடு செய்வதற்கு தீயணைப்புத் துறை சான்றிதழ், வருவாய் துறை சான்றிதழ், சுகாதாரத்துறை சான்றிதழ் என ஆயிரம் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் மக்களின் வழிபாட்டு உரிமை மீது திணிக்கும் அரசு. கோவில் யானை பாதுகாப்பில் அலட்சியம் காட்டியுள்ளது.
இந்து முன்னணி
சாதாரணமாக பட்டாசு கடை, அடகு கடை போன்றவை வைப்பதற்கு கூட ஆயிரம் விதிமுறைகள் உள்ளது. ஆனால் கோவில் யானை இருக்கும் இடத்தில் எந்த விதிமுறையும் கடைபிடிக்காமல் எளிதில் தீப்பிடிக்கும் வண்ணம் கோவில் யானை கொட்டகை இருந்ததற்கு அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம்.
அறநிலையத்துறை பக்தர்களிடம் வாரிச்சுருட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என எடுத்துக்கொண்டால் வனத்துறையும் தீயணைப்புத் துறையும் இதில் அலட்சியமாக இருந்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே திறனற்று செயல்படுவதைத் தான் இச்சம்பவம் உணர்த்துகிறது.
எச்சரிக்கை
கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் கோவில் யானைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இனியேனும் அறநிலையத்துறையும் தமிழக அரசும் இது போன்ற துர் நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒரே நாளில் இறைப்பணியில் இருந்த இரண்டு யானைகள் உயிரிழந்த நிகழ்வானது ஏதோ நடைபெற உள்ள அசம்பாவிதத்தை குறிப்பதால் எந்த ஒரு துர்நிகழ்வுகளும் நடைபெறாமல் தடுத்திட உடனடியாக அறநிலையத்துறை அனைத்து கோவில்களிலும் சிவாச்சாரியார்களையும் வேத பண்டிதர்களையும் வைத்து உடனடியாக சாந்தி பரிகார பூஜையை நடத்திட வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது." என கூறியுள்ளார்.