தன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி
தனது வீட்டின்மீது, தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகியை கும்பகோணம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசித்து வருபவர் சக்கரபாணி. இவர் இந்து முன்னணி அமைப்பின் கும்பகோணம் மாநகர செயலாளராக இருக்கிறார்.
நேற்று அதிகாலை இவருடைய வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக போலீஸாருக்கு இவர் தகவல் தெரிவித்தார்.
ஏற்கெனவே பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டபோது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன.
அது மட்டுமில்லாமல் தற்போது கோவையில் கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு, கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என்று தீவிரவாத செயல்கள் ஆங்காங்கே நடந்து வருவதால் இந்த தகவலை கேள்விப்பட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சக்கரபாணியின் வீட்டுக்கு விரைந்தனர்.
பெட்ரோல் வீசப்பட்ட பாட்டில் பகுதிகள், திரி ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த நிலையில் தகவல் அறிந்து கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா மற்றும் பாஜக பிரமுகர்களும் சக்கரபாணி இல்லத்தில் வந்து குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல் துறையினரின் மோப்பநாய் டபி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. ஆனாலும், பெரிதான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் சக்கரபாணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
அதனையடுத்து நேற்று மாலை சக்கரபாணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் அந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தானே தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக சக்கரபாணி ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சக்கரபாணியை கைது செய்துள்ளனர். பரபரப்புக்காக தனது வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி பிரமுகரின் இந்த செயல் கும்பகோணத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.