கல்யாணத்துக்கு போறமாதிரி ட்ரெஸ் போடுறாங்க; அதெல்லாம் சரிவராது - தாலிபான் விளக்கம்!
பெண்களுக்கான உயர்கல்வி தடை குறித்து தாலிபான் விளக்கமளித்துள்ளனர்.
கல்வி தடை
பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களால் முடக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து படிக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த நடவடிக்கை உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,
இது குறித்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கமளித்துள்ளார். அதில், "பல்கலைக்கழகம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு உயர்கல்வி அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை 14 மாதங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தது.
விளக்கம்
14 மாதங்கள் தாண்டியும் இந்த வழிகாட்டுதல்களை மாணவிகள் பின்பற்றுவதில்லை. ஆடை தொடர்பான விதிகளையும் பின்பற்றுவதில்லை. கல்வி நிலையங்களுக்கு வரும் போது ஆண் உறவினரின் துணையுடன் வர வேண்டும் என்ற விதியையும் பின்பற்றுவதில்லை.
ஏதோ திருமண விழாவிற்கு வருவது போல மாணவிகள் ஆடை அணிந்து வருகின்றனர். ஹிஜாப் விதிகளை அவர்கள் முறையாக பின்பற்றுவதில்லை. மேலும், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள் பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு ஒத்து வராதவை.
சில படிப்புகள் இஸ்லாமின் அடிப்படைகளை மீறும் விதமாக பயிற்றுவிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.