இங்க போனீங்கன்னா 10 பைசா மிஞ்சாது - உலகிலேயே அதிக செலவுமிக்க 2 நகரங்கள்!
உலகிலேயே அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதிக செலவு
மக்கள் வாழும் ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்ப செலவு என்பது மாறுபடுகிறது. கிராமப்புறங்களில் வாழும் மக்களின் செலவை காட்டிலும் நகரங்களில் வாழும் மக்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும்.
அங்கு பொருட்கள், வாடகை, உணவு உள்ளிட்டவை அதிக செலவை ஏற்படுத்தும். அந்த வகையில் உலகிலேயே அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் முதல் 2 இடங்களில் இருப்பது, சிங்கப்பூர் மற்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் ஆகிய 2 நகரங்கள் தான்.
இதற்கு அடுத்த இடங்களில், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா, அமெரிக்காவின் நியூயார்க், மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் நகரங்கள் உள்ளன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 7.4 சதவீதம் அளவு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இந்த நகரங்களில் அதிகரிக்கிறது.
சிங்கப்பூர்
கடந்த 11 ஆண்டுகளாக எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பு வெளியிட்டு வரும் ஆய்வு அறிக்கையில், அதிக செலவு மிக்க நகரம் என்ற பிரிவில் சிங்கப்பூர் நகரம் 9 முறை முதலிடத்தை பிடித்துள்ளது.
நுகர்பொருள் முதல், சேவைகள் வரை அனைத்து பிரிவிலும் சிங்கப்பூரில் விலை உயர்ந்ததை தொடர்ந்து அந்த நகரம் அதிக செலவு மிக்க நகரமாக மாறியுள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது போக்குவரத்து செலவு, மதுபானங்கள், துணிகள், மளிகைப் பொருட்களின் விலையும் சிங்கப்பூரில் மிக அதிகம்.