சீமான் நிதானமாக பேச வேண்டும் - வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த நீதிபதி

Seeman Madras High Court
By Karthikraja Feb 06, 2025 08:30 PM GMT
Report

சீமானை அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சீமான் பேச்சு

கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். 

seeman

தேர்தல் பிரச்சாரத்தின் போது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறித்து அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக சீமான் மீது கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். 

பெரியாரை விமர்சித்த கருணாநிதிதான் பெரிய கூலி - கனிமொழிக்கு சீமான் பதிலடி

பெரியாரை விமர்சித்த கருணாநிதிதான் பெரிய கூலி - கனிமொழிக்கு சீமான் பதிலடி

அவதூறு வழக்கு

இந்த புகார் மீதான வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. 

madras high court

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விலக்களிக்க மறுப்பு

மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்த போது, நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கினை எதிர்கொண்டால்தான் இது போன்று பேசுவதை சீமான் நிறுத்துவார் என கூறி அந்த கோரிக்கையை நிராகரித்தார்நீதிபதி.

மேலும், அடுத்தவரின் கோபத்தை தூண்டும் விதமாக பேசுவதுதான் சீமானின் வழக்கமாக உள்ளது. இதுபோன்ற கருத்துகளை சீமான் பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்குமாறு நீதிபதி சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.