பெரியாரை விமர்சித்த கருணாநிதிதான் பெரிய கூலி - கனிமொழிக்கு சீமான் பதிலடி
பெரியாரை அண்ணா, கருணாநிதியை விட யாரும் அதிகம் விமர்சித்தது இல்லை என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
ஈரோட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 'பெரியாரை கூலிகள் விமர்சிக்கிறார்கள்' என கனிமொழி விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான், பெரியாரை திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதியை விட யாரும் அதிகம் விமர்சித்தது இல்லை. பெரியாரை விமர்சித்த கருணாநிதிதான் பெரிய கூலிக்காரர். நான் விமர்சிக்கவில்லை. பெரியார் பேசியதைதான் பேசினேன்.
கனிமொழி
கனிமொழி ஒரு பெரியாரிஸ்டா? அவர் கடவுள் மறுப்பாளர் என்பதை நம்ப வேண்டுமா? அவரகள் கட்சி பெண்களுக்கு குடுத்த முன்னுரிமை என்ன? பெரியார் சொன்ன சாதி மறுப்பை பின்பற்றுகிறவரா? தமிழ்நாட்டில் இத்தனை தொகுதி இருக்கும் போது நீங்கள் 2 முறை தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்?
அண்ணா பல்கலை வளாகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறினீர்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் எடுத்த நடவடிக்கை என்ன? கொடநாடு கொலையில் எடுத்த நடவடிக்கை என்ன?
ஆ.ராஜாவை தமிழனாக பார்க்காமல் தலித்தாக பார்த்து,அவரை நீலகிரியில் கொண்டு நிறுத்தினீர்கள்.பிராமண பெண்மணி ஜெயலலிதா அருந்ததிய சமூகத்தை சேர்ந்த தனபாலை சபாநாயகராக்கினார். பெரியாரிஸ்டுகள் நீங்கள் சாதிக்க முடியாததை அந்த பிராமண பெண் சாதித்தார். என பேசினார்.