தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? - மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு
இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடல் பகுதியில் நாளை(12.10.2024) வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் நிலையில் தமிழகத்திற்கான மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிக கனமழை
இதன் காரணமாக இன்று(11.10.2024) திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் (12.10.2024) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும், திருப்பூர், கோவை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
13.10.2024(திங்கட்கிழமை) அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
14.10.2024(செவ்வாய்கிழமை) அன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
15.10.2024(புதன் கிழமை) சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அதிகனமழை எச்சரிக்கையைடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.