6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொளுத்தும் வெயில்; ஏன் இப்படி - என்ன செய்யலாம்?
6 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயில்
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் உச்சம், கடந்த சில நாட்களாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 100 பாரான்ஹீட்டை தாண்டி வாட்டி வருகிறது. அதன் வரிசையில், சென்னை மீனப்பாக்கத்தில் அதிகபட்சமாக 108 புள்ளி 86 பாரான்ஹீட் வெப்பம் பதிவானது.
அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 107.96 பாரான்ஹீட் வெயில் தாக்கியுள்ளது. கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தருமபுரி, நாகை, நாமக்கல், சேலம், தஞ்சை உள்பட 20 இடங்களிலும் 100 பாரான்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவானது.
என்ன செய்யலாம்?
சென்னையைப் பொறுத்தவரைக் கடற்காற்றும் இருப்பதால், அதன் வேகத்தைப் பொறுத்தே இன்னும் இந்த வெப்பம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்க முடியும். மேலும் தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விடவும் 2-4 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.
அதிக வெப்பத்தை தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற ஆரோக்கியமான இயற்கை பானங்களை அருந்தவேண்டும். தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. டீ, காபி அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்குக் கேடு. இவற்றை முறையாகப் பின்பற்றினாலே போதுமானது.