வெயிலில் செல்வோர் உஷார்..! ஹீட் ஸ்ட்ரோக்கால் ஒருவர் பலி - தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்?
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு கட்டுமான தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளி பலி
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு கட்டுமான தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று வடமாநில தொழிலாளி ஒருவர் கடும் வெயிலில் வேலை செய்தபோது கால் மரத்துப்போன உணர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீட் ஸ்ட்ரோக் - தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்:
அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரை குளிர்ந்த நிழல் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் கூடுதல் ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். அவர் விழிப்புடன் இருந்தால் குளிர் திரவங்களை தரலாம். தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, நீர், உப்பு நீர் கரைசலும் தரலாம். சுயநினைவின்றி இருந்தால் வேகமாக அவரை குளிர்விப்பது அவசியம்.
பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை தளர்த்தி குளிர்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கலாம். அக்குள் மற்றும் கவட்டியில் ஈரத்துண்டு, ஐஸ்பேக் மூலம் ஒற்றி எடுக்க வேண்டும். மின்விசிறியின் காற்று அவரது உடலில் படவேண்டும். மேலும், குளிர்சாதன அறையை பயன்படுத்தலாம்.