அதெல்லாம் என்னோட உரிமை...நீங்க சொல்லாதீங்க !! சபாநாயகர் vs எதிர்க்கட்சி தலைவர் - காரசார விவாதம்!!
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் காரசார விவாதம் நடந்த நிலையில், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபை
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று 3-வது நாளாக கூடியது. காவிரி நீர் தராத கர்நாடகாவை கண்டித்து தனித்தீர்மானம் கொண்டு வருவதற்காக சட்டசபை கூடியது. இன்றுடன் சட்டசபை முடிவடைகிறது. இன்று சட்டமன்றத்தில் அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்து 3 பேரை நீக்க சொல்லிய அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் கூறவில்லை.
ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீகாரம் செய்துவிட்டது என குறிப்பிட்டு, இந்த நிலையில் அதிமுக உறுப்பினரே அல்லாத ஒருவர் எப்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நீடிக்கலாம் என்று அவர் வினவினார்.
மேலும், சட்டசபை விதிகளின் படி எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் ஒன்றாக உட்கார வேண்டும் என்பதுதான் மரபு என குறிப்பிட்ட எடப்பாடி, ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சித் துணை தலைவராக நியமிக்கப்பட்ட பிறகும் வேறு இடத்தில் அமர்ந்திருக்கிறார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உயர்நீதிமன்றமும் அவருடைய நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த பிறகு சபாநாயகர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்று சபாநாயகர் செய்வது நியாயமும் இல்லை என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு பேசுகையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும்தான் விதிகள் பொருந்தும், துணைத் தலைவர் பதவிக்கு விதிகள் ஏதும் இல்லை என்று கூறி அந்த பதவி அந்த கட்சியினரே பார்த்து நியமனம் செய்யக் கூடிய ஒன்றாகும் என்றும் யார் மனதும் நோகாதபடி ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதே நேரத்தில் இருக்கை ஒதுக்குவது சபாநாயகரின் தனிப்பட்ட உரிமை என குறிப்பிட்ட அப்பாவு, அது குறித்து கேள்வி கேட்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை இல்லை என அவர் விளக்கமளித்தார். இந்நிலையில், சபாநாயகரின் பதில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு பின்னர் அவையில் இருந்து வெளியேறினர்.