பல முறை கடிதம் எழுதிவிட்டேன்...டோல்கேட் வேண்டாம் என்று..பேரவையில் எ.வ.வேலு தகவல்
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கேட் அமைக்கவேண்டாம் என்ற கோரிக்கையுடன் பல முறை மத்திய அரசிற்கு கடிதம் எழுதி விட்டதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை
தமிழக சட்டமன்றம் இன்று மூன்றாவது நாளாக கூடியது. அப்போது புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜ், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து பிருந்தாவனம், அண்ணாசாலை, டிவிஎஸ் கார்னர் வழியாக செல்லும் சாலை நகரின் மைய பகுதியில் உள்ளதை குறிப்பிட்டு, இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர் என்றும் இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்றார்.
அந்த இன்னல்களை தவிர்க்க அந்த சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
எ.வ.வேலு பதில்
அதற்கு பதிலளித்து பேசிய தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைக்க கூடாது என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்து, தமிழ்நாட்டில் உள்ள சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என கூறினார்.
அதனடிப்படையில் தான் மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுகிறது என குறிப்பிட்ட அவர், அதில் சுங்கச்சாவடி அமைப்பதில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் சொல்கிற சாலையை ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.