கோரிக்கை வைத்த கிராம மக்கள்; உடனே நிறைவேற்றிய நடிகர் விஷால் - மூதாட்டி நெகிழ்ச்சி பேச்சு!
படப்பிடிப்புக்கு சென்ற கிராமத்தில் தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.
நடிகர் விஷால்
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரியா பிவானி சங்கர் நடிக்கும் 'விஷால் 34' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களில் கடந்த 20 நாட்களாக படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இந்நிலையில் குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு சென்ற நடிகர் விஷாலிடம், அக்கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட விஷால் உடனடியாக போர்வெல் இயந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் போர் போட்டு கொடுத்து, 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தேக்க தொட்டிகளும் அமைத்துக் கொடுத்துள்ளார்.
நெகிழ்ச்சி செயல்
மேலும் தண்ணீர் பிடிப்பதற்கு 6 குழாய்களையும் பொருத்தும் பணி நடைபெறுகிறது. பணிகள் முடிந்த பின்னர் அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாக கிராம மக்களிடம் நடிகர் விஷால் கூறிச் சென்றுள்ளார். விஷாலின் இந்த செயல் அக்கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சென்னம்மாள் கூறுகையில் "விஷால் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்தபோது தன்னை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார், எனக்கு ஒன்றும் வேண்டாம், கிராமத்தில்தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
அதற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று கேட்டேன். நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.. கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே” என்று கேட்டதாக மூதாட்டி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.