புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயம் - அதிரவைக்கும் சம்பவம்!
புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி உயிரிழப்பு
செங்கல்பட்டு, சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா(12). அப்பகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு விளக்கு மாற்றுவதற்காக கலைச்செல்வன் (20) என்பவர் மின் கம்பத்தின் மீது ஏறி உள்ளார்.
ஆனால் மின்கம்பம் முழுதும் சேதம் அடைந்திருந்ததால் அடிப்பகுதி முறிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டார்.
தலை மாயம்
இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த இவர் உயிரிழந்தார். அதன்பின் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மயானத்தில் உறவினர்களால் புதைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சூரிய கிரகணம் என்பதால் இரவு மயானத்தில் பூஜை செய்து சிறுமியின் தலையை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த வழியாக சென்ற கிராமத்தினர் மயானத்தில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை பழம், குங்குமம் போன்ற பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருப்பதைக் கண்டு சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பகீர் சம்பவம்
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார், வருவாய் துறையினர் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து பிரேதத்தை பரிசோதித்ததில் சிறுமியின் தலை இல்லாமல் இருந்துள்ளது.
மறு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.