என்னையும் என் மகளையும் கருணை கொலை செய்யுங்கள் - காவலர் தன் குழந்தையுடன் தர்ணா!

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Vinothini Aug 16, 2023 05:31 AM GMT
Report

டிஜிபி அலுவலகம் முன்பு தலைமை காவலர் மகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் மகளுடன் தர்ணா

சென்னையில் உள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் கோதண்டபாணி. இவர் ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2 மணியளவில் தனது 10 வயது மகள் பிரதிக்‌ஷாவுடன் டிஜிபி அலுவலகத்திற்கு வந்ந்தார்.

head-constable-dharna-with-his-daughter

அப்பொழுது இருவரும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர் கூறியது, "எனது மகளுக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. எனவே எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மகளைச் சேர்த்தேன். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை 5 ஆண்டுகளாக மகளுக்கு தொடர்ந்து கொடுத்தேன்" என்றார்.

காவலரின் கோரிக்கை

இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "இந்த மாத்திரைகளின் எதிர்விளைவு காரணமாக எனது மகளுக்கு வலதுகால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதே மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தேன். மருத்துவர்கள் நோயை சரியாகக் கண்டறியாமல் சிகிச்சை அளித்தனர். இதனால், மகளின் வலது கால் பாதம் சூம்பிப்போனது.

head-constable-dharna-with-his-daughter

உடலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டன, மருத்துவர்களின் அலட்சியப் போக்கு தான் இதற்கு காரணம். எனவே, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் மகளின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளியாகிவிட்ட மகளுக்கு, அதற்கான சான்றிதழும், நிதி உதவியும் வாங்கித் தருவதாகச் சொல்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக இதற்காக போராடுகிறேன்.

ஆனால், நியாயம் கிடைக்கவில்லை. எனவே என் மகளையும் என்னையும் கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.