தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை - வைத்தியலிங்கம் மறுப்பு..!
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ளத தனியார் மண்டபத்தில் நடந்தது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு குறிப்பிட்ட நபர்களே ஆதரவு தெரிவித்துள்ளதால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பதில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தி கொண்ட ஈபிஎஸ்
இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவர்களின் அறிவுரை படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் எனவும் செய்திகள் வெளியானது.
மேலும் எடப்பாடி பழனிசாமி உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வைத்தியலிங்கம் மறுப்பு

இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தனக்கு கொரோனா தொற்று இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.