விதிகளை மீறிய Axis HDFC வங்கிகள் - 2.91 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
வங்கி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கிக்கு அபராதம் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி
இதுகுறித்து ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆக்சிஸ் வங்கி, தகுதியற்ற நிறுவனங்களின் பெயர்களில் சேமிப்பு வைப்பு கணக்குகளைத் தொடங்கியுள்ளது.
மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீடு (UCIC) வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்குப் பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை வழங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் விவசாயக் கடன்கள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் வங்கி மீறியுள்ளது. குறிப்பாக விவசாயக் கடனுக்கு ரூ.1.60 லட்சம் வரையிலான பிணையப் பாதுகாப்புத் தொகையைப் பெற்றுள்ளது.
எச்.டி.எஃப்.சி
மேலும் ஆக்சிஸ் வங்கியின் முழுச் சொந்தமான துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடி ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு வைப்புத்தொகை மீதான வட்டி விகிதம், வங்கிக் கடன்களை வசூலிக்கும் முகவர்கள், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை ஆகியவை குறித்த சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.