ஒரு வார்த்தைக் கூட சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதில்லை - பிரதமர் மோடி உறுதி
தான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவ வார்த்தை கூட பேசியதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி
2014-ஆம் ஆண்டு முதல் நாட்டின் பிரதமராக இருந்து வரும் மோடி மீது வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு, அவர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதே. அநேக நேரங்களில் பேசும் போது அதனை தொடர்ந்து மறுத்து பேசி வருகிறார் பிரதமர் மோடி.
இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் மீது இது குறித்த கருத்துக்களே வெளிப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேட்டி ஒன்றில் இவை குறித்து பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிராக..
தான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும், பாஜக அவர்களுக்கு எதிராக "இன்று மட்டுமல்ல, ஒருபோதும்" செயல்படவில்லை என உறுதிபட தெரிவித்திருக்கிறார். எவ்வாறாயினும், யாரையும் “சிறப்புக் அந்தஸ்து பெரும் குடிமக்களாக” தான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று அவர் அப்பேட்டியில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
மேலும், அப்பேட்டியில் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற உணர்வை காங்கிரஸ் தொடர்ந்து மீறுவதாகவும், வாக்கு வங்கி அரசியலுடன் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை அம்பலப்படுத்துவதே தனது பிரச்சார உரைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து தான் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக மட்டுமே பேசுவதாக சுட்டிக்காட்டி, அரசியல் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் அதைத்தான் கூறி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லை என்று முடிவு செய்ததாகவும் மோடி கூறினார்.