19 வயது மாணவன் துரத்திச் சென்று சுட்டுக் கொலை - காரணத்தை கேட்டு அதிர்ந்து போன ஹரியானா காவல்துறை
ஹரியானா மாநிலத்தில் பசு கடத்தும் கும்பல் என்று தவறாகக் கருதி 19 வயது மாணவரைச் சுட்டுக் கொன்ற கும்பலில் 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானா
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்யன் மிஸ்ரா(19). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் இவர் தன்னுடைய நண்பர்கள் ஹர்ஷித் மற்றும் ஷாங்கி ஆகியோருடன் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி காரில் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, பசு கடத்துவோர் காரில் நோட்டமிட்டபடி செல்வதாக நினைத்த ஒரு கும்பல், வாகனத்தைப் பிடிக்க விரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது அந்தக் கும்பல் 25 கிலோ மீட்டர் தூரம் காரை விடாமல் துரத்திச் சென்றுள்ளனர்.
கைது
அப்போது, பல்வால் சுங்கச் சாவடியில் தடுப்புகளை உடைத்தபடி ஆர்யன் மிஸ்ரா கார் சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் காரை மடக்கிப் பிடித்த கும்பல், ஆர்யன் மிஸ்ரா காரில் இருந்து வெளியே தள்ளி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஃபரிதாபாத் காவல்துறையினர் அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரவ் ஆகிய ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.