கவிழும் பாஜக ஆட்சி - காங்கிரஸ் ஆதரவிற்கு வந்த 3 சுயேட்சைகள் - ஹரியானாவில் பரபரப்பு
ஹரியானா மாநிலத்தில் பாஜக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்.எல்.ஏ'க்கள் திரும்ப பெற்றுள்ளார்கள்.
ஹரியானா அரசியல்
தலைநகர் டெல்லிக்கு அருகில் இருக்கும் மாநிலமான ஹரியானா மாநிலத்தில் மொத்தமாக 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 30 இடங்களையும், ஜனநாயக்க ஜனதா கட்சி 10 இடங்களையும், இந்திய தேசிய லோக் தளம் 1 இடத்தையும், பாஜக கூட்டணியில் இருக்கும் ஹரியானா லோகித் கட்சி 1 இடத்தையும், சுயேச்சை 6 இடங்களை வென்றிருந்தனர்.
ஆட்சி அமைக்க தேவைப்படும் பெருமான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத சூழலில், பாஜக - ஜனநாயக்க ஜனதா கட்சி இணைத்து ஆட்சி அமைத்தன. சுயேட்சைகளில் ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கு 3 பேரும், ஜனநாயக்க ஜனதா கட்சிக்கு ஒருவரும் தங்களது ஆதரவை அளித்திருந்தனர்.
கவிழும் ஆட்சி
ஆனால், தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு இல்லாத காரணத்தால், பாஜகவிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது ஜனநாயக்க ஜனதா கட்சி. இதனை தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பாஜகவின் மனோகர் லால் கட்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் தற்போது, பாஜகவிற்கு அளித்த தங்களது ஆதரவை சுயேட்சைகளான சோம்பீர் சங்வான், ரந்தீர் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் 3 பேரும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
அதனால் ஹரியானா பா.ஜ.க அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. பாஜகவிற்கு அளித்த வாபஸை திரும்ப பெற்றஅவர்கள் காங்கிரஸ் ஆதரவு பக்கம் வந்துள்ளனர். இந்த வருடத்தில் ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.