அஸ்வினை கழற்றி விட்டு சுந்தரை தேர்ந்தெடுக்க காரணமே இதுதான்; கம்பீர் வேலை - ஹர்பஜன்
இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்தது குறித்து ஹர்பஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற சுந்தர்
இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
முன்னதாக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டது.
ஹர்பஜன் கருத்து
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “இது அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களின் நீண்ட கால திட்டம் என்று நினைக்கிறேன். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக நிறைய விக்கெட்டுகளை எடுத்து மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
ஆனால் தற்போது 38 வயதாகும் அவர் விரைவில் ஓய்வு பெறும் சூழலில் இருக்கிறார். அதனாலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறும் போது வருங்காலத்தில் அசத்துவதற்காக வாஷிங்டன் சுந்தரை தற்போது இந்திய அணி வைத்துள்ளது.
சுந்தரை வைத்து நாம் தயாராக வேண்டும் என்று இந்திய அணி கருதுகிறது. அதனாலேயே அவர்கள் இந்த வழியில் வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.