இந்தியாவில் அரிய வகை பறவைக் காய்ச்சல்; 4 வயது குழந்தைக்கு 2-வது பாதிப்பு - WHO தகவல்!
இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல்
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை 'வியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2)' என்ற வைரஸால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2019-ம் ஆண்டு அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது 4 வயது குழந்தைக்கு இரண்டாவது பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
டிஸ்சார்ஜ்
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எச்9என்2 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு. இதனையடுத்து கடந்த 3 மாதங்களாக குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த வைரஸ் குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள கோழிப் பண்ணையிலிருந்து தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்கும் சுவாச நோயின் அறிகுறிகள் இல்லை.
மேலும், இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது அல்ல என கூறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது. இந்த இரண்டாவது பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து இந்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.