மாணவர்கள் கையில் கயிறு கட்ட கூடாதா? இது 'அவர்களுடைய' கைவேலை - எச் ராஜா கண்டனம்
மாணவர்களிடையே சாதி மோதலை தடுக்க நீதியரசர் சந்துரு வழங்கிய பரிந்துரைக்கு எச் ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நீதிபதி சந்துரு குழு
கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சாதி காரணமாக வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு பள்ளி கல்லூரி மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகளை அழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார் .
இந்நிலையில் நேற்று நீதிபதி சந்துரு தன் அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். இதில் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும், குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது, மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும், கைகளில் வண்ணக் கயிறு, நெற்றி திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
எச் ராஜா
இந்நிலையில் இதற்கு பாஜகவை சேர்ந்த எச் ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் ஹிந்துக்களுக்கு எதிரானவை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நெற்றியில் திலகம் வைக்க கூடாது என்றும் கையில் கயிறு கட்ட கூடாது என்றும் அவர்கள் எப்படி கூறலாம்? அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நீதிபதி சந்துரு தலைமையிலான பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க கூடாது என நாங்கள் (பாஜக) தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என தெரிவித்தார்.
ஹிஜாப் தடை செய்யப்படக் கூடாது என்பவர்கள் இந்துக்கள் அணியும் கோவில் ரட்சை (வண்ணக் கயிறு) மற்றும் நெற்றி திலகம் ஆகியவற்றை தடை செய்ய முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது முழுவதும் ஈவாஞ்சலிஸ்ட் கைவேலை. இந்துக்கள் உரிமை காப்போம். @CMOTamilnadu pic.twitter.com/WpluaGUlMB
— H Raja ( மோடியின் குடும்பம்) (@HRajaBJP) June 19, 2024
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் , ஹிஜாப் தடை செய்யப்படக் கூடாது என்பவர்கள் இந்துக்கள் அணியும் கோவில் ரட்சை (வண்ணக் கயிறு) மற்றும் நெற்றி திலகம் ஆகியவற்றை தடை செய்ய முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது முழுவதும் ஈவாஞ்சலிஸ்ட் கைவேலை. இந்துக்கள் உரிமை காப்போம். என பதிவிட்டுள்ளார்.