அடுத்த 24 மணிநேரத்தில் விஜய் இதை பண்ண முடியுமா? சவால் விடுத்த எச் ராஜா!
’’இருமொழி கொள்கையைத் தொடருவோம் என்று கூறும் விஜய் தனது குழந்தை படிக்கும் கல்வி நிறுவனத்திலிருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசுப் பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்'' என்று எச் ராஜா சவால் விட்டுள்ளார்.
இருமொழி கொள்கை
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, தமிழ்நாட்டை பொறுத்தவரை மத்திய அரசுக்கு எதிராகப் பேசினால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற மூடநம்பிக்கை உள்ளது. அதன் காரணமாக தான் அனைவரும் மத்திய அரசை எதிர்த்துப் பேசுவதாகக் கூறினார்.
எச் ராஜா
மேலும் விஜயின் குழந்தை எங்கு படிக்கிறது? இருமொழி கொள்கையிலா? அல்லது சமச்சீர் கல்வியிலா? என்று கேள்வி எழுப்பிய அவர்,,’இங்கு உள்ள அரசு பள்ளியில் சமச்சீர் கல்வியில் சேர்த்து உள்ளார்களா?என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசியவர்,’’ விஜய் மட்டுமில்லை தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடருவோம் என்று கூறும் அனைவரும் தங்களது குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனத்திலிருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசுப் பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம் என்று காட்டமாகக் கூறினார்.