புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் - பின்னணி என்ன?
இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன்(18.02.2025) நிறைவு பெறும் நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தற்போது தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமாரை(gyanesh kumar) புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க முடிவுசெய்யப்பட்டது.
ஞானேஷ் குமார்
இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். ஞானேஷ் குமார் இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். 2029 ஜனவரி 26ஆம் தேதி வரை இவர் இந்த பதவியில் தொடர்வார். இந்தாண்டு நடைபெறவுள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் தொடங்கி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் உட்பட 2029 வரைஇந்தியாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை நடத்துவார்.
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஞானேஷ் குமார் 1988 பேட்ச் கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் (B.Tech) முடித்துள்ளார். மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை செயலாளர், உள் விவகாரங்கள் துறை இணை மற்றும் கூடுதல் செயலாளர், பாதுகாப்புத் துறை இணைச் செயலாளர் கூட்டுறவுத் துறை செயலாளரர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். முன்னதாக கேரள அரசில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
உள் துறை கூடுதல் செயலாளராக இருந்த போது, ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்யும் மசோதா வரைவு உருவாக்கியது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர்- லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது, அயோத்தியில் ராம ஜன்மபூமி அறக்கட்டளை உருவாக்கியது ஆகியவற்றில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விவேக் ஜோஷி
ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றதையடுத்து, உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த, 1989 பேட்ச் ஹரியானா கேடர் ஐ.ஏ.எஸ் விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக ஹரியானா மாநில தலைமைச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நாளை(19.02.2025) நடைபெற உள்ளதால், புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமனத்தை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.