2 பீட்சா வாங்காமல் இருந்திருந்தால் இன்று 8000 கோடிக்கு அதிபதி - ஐடி ஊழியரின் சோக கதை
ஐடி ஊழியர் பிட்காயின் கொடுத்து பீட்சா வாங்கியதற்கு வருத்தமடைந்துள்ளார்.
பிட்காயின்
சர்வதேச அளவில் பங்குச்சந்தை, தங்கத்தில் செய்த முதலீடுகளை விட டிஜிட்டல் கரன்சியான பிட்காயினில் செய்த முதலீடு பெரிய லாபம் ஈட்டி தந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலராக(இந்திய மதிப்பில் 85 லட்சம்) உச்சமடைந்தது.
2 பீட்சா
ஆரம்பகாலத்தில் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் இன்று பல கோடிக்கு அதிபதியாக மாறியுள்ளனர். ஆனால் ஐடி ஊழியர் ஒருவர் 10,000 பிட்காயின் கொடுத்து பீட்சா வாங்கியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி லாஸ்லோ ஹான்ஸ்லோ என்ற அமெரிக்காவை சேர்ந்த ஐடி ஊழியர் பிட்காயின் தொடர்பான forum ஒன்றில் 2 பெரிய சைஸ் பீட்சா வழங்கினால் 10,000 பிட்காயின் அளிப்பதாக தெரிவித்துள்ளார். யாரும் இந்த கோரிக்கையை ஏற்காத போது நான் வழங்கும் பிட்காயின் அளவு குறைவாக உள்ளதா என மற்றொரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4 நாட்களாக யாருமே முன் வராத நிலையில், 22 ஆம் தேதி அன்று 19 வயது கல்லூரி மாணவரான ஜெர்மி ஸ்டர்டிவன்ட் என்பவர் இதற்கு சம்மதித்து 10,000 பிட்காயினுக்கு 2 பீட்சாக்களை வழங்கியுள்ளார். பீட்சா வாங்கிய பிறகு தனது குழந்தைகளுடன் உள்ள படத்தை பதிவிட்டுள்ளார்.
பிட்காயின் பீட்சா தினம்
அப்போது ஒரு பிட்காயின் மதிப்பு வெறும் 41 அமெரிக்க டாலர் மட்டுமே. பல ஆண்டுகள் கழித்து இந்த பரிவர்த்தனை செய்தது குறித்து வருத்தத்துடன் பதிவிட்டார்.
இதுதான் பிட்காயின் மூலம் நிகழ்ந்த முதல் வணிகம் ஆகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதியை பிட்காயின் ஆர்வலர்கள் பிட்காயின் பீட்சா தினமாக அனுசரிக்கின்றனர்.
அன்று 10000 பிட்காயின் செலுத்தி பீட்சா வாங்காமல் இருந்திருந்தால் இன்று லாஸ்லோ ஹான்ஸ்லோ ஏறத்தாழ 8000 கோடிக்கு அதிபராகி இருப்பார்.