தாயை கொன்று விட்டு ஸ்டேட்டஸ் வைத்த மகன் - அதிர்ந்த உறவினர்கள்
தாயை கொலை செய்து விட்டு மகன் ஸ்டேட்டஸ் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட தாய்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஜோதிபென் கோசாய்(48). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் தனது கணவரை பிரிந்து நிலேஷ் கோசாய் (21) என்ற தனது மகனுடன் வசித்து வருகிறார்.
ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது மகனுடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வாக்குவாதம் முற்றி அடிதடியில் கூட முடிந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று நிலேஷுக்கும், ஜோதிபென்னுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொலை
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நிலேஷ், ஜோதிபென்னை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். ஆனால், ஜோதிபென் அவரைத் தடுத்துள்ளார். இதனையடுத்து போர்வையால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில், ஜோதிபென் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து செய்வதறியாமல் தவித்த நிலேஷ், தனது அம்மாவுடன் உள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் வைத்து, "நான் அம்மாவை கொன்றுவிட்டேன். அதனால் என் வாழ்க்கையையே இழந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. ஓம் சாந்தி. உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா" என பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக நிலேஷின் வீட்டிற்கு வந்த காவல் துறை, அங்கு அவரது தாயின் சடலத்திற்கு அருகே அமர்ந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாக்குமூலம்
நிலேஷ் கோஷாயை போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில், ஜோதிபென் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு மருந்துகள் கொடுப்பது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாக மருந்துகளை சாப்பிடாமல் இருந்துள்ளதால் ஜோதிபென்னின் மனநலம் மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாயை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஜோதிபென்னின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.