காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்த தொழிலதிபர் - என்ன காரணம்?
தொழிலதிபர் ஒருவர் 18 ஆண்டுகள் பயன்படுத்திய காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்துள்ளார்.
ராசியான கார்
குஜராத் மாநிலம் அம்ரேலி லத்தி தாலுகா பதர்ஷிங்கா கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் போல்ரா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் வந்த பிறகு சஞ்சய் போல்ராவாழ்க்கையில் பல நல்வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் தந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சஞ்சய் போல்ரா தனது காரை குடும்ப உறுப்பினர் போலப் பார்த்து வந்துள்ளார். மேலும் 18 ஆண்டுகளாகத் தனது சமூக நிலையை உயர்த்திய ராசியான காரை விற்க தொழிலதிபர் சஞ்சய்க்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது ராசியான காரை இறுதிச்சடங்கு செய்து ,ஊர்வலம் நடத்தி, நல்லடக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அழைப்பிதழை அடித்து கிராம மக்களுக்கு வழங்கியுள்ளார். நவ -7 ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெற்றது.
நல்லடக்கம்
சுமார் 1500-பேர் முன்னிலையில் தனது விவசாய நிலத்தில் ஜேசிபி எந்திரம் கொண்டு தோண்டப்பட்ட குழியில் ராசியான கார் இறக்கப்பட்டது. அதன்பிறகு கார் முழுவதும் வண்ண மலர்கள் தூவி நல்லடக்கம் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் காரை புதைத்த இடத்தில் தொழிலதிபர் சஞ்சய் போல்ரா மரக்கன்று நட்டார்.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் பூரி, சப்பாத்தி, சப்ஜி, லட்டு என்று தடபுடலாக விருந்தும் பரிமாறப்பட்டது.குஜராத் தொழிலதிபர் சஞ்சய் போலாரா இந்த செயல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.