நள்ளிரவில் கண் நோயாளிகளை எழுப்பி பாஜகவிற்கு ஆள் சேர்ப்பு - மருத்துமனையில் நுழைந்த கட்சியினர்

Cataract BJP Gujarat Patient
By Karthikraja Oct 20, 2024 05:30 PM GMT
Report

கண் மருத்துவமனையில் நள்ளிரவில் நோயாளிகளை எழுப்பி பாஜகவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக உறுப்பினர் சேர்க்கை

உலகில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி நாங்கள்தான் என பாஜக கூறி வருகிறது. தற்போது நாடு முழுவதும் கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கோடு பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி வருகிறது. 

bjp membership drive in rajkot

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் 2 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். ஆனால் இது மக்களை உளவியல் ரீதியாக கவரும் பொய்க் கணக்கு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. 

பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் - மாட்டு மூத்திரம் குடிக்க வைத்த எம்எல்ஏ

பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் - மாட்டு மூத்திரம் குடிக்க வைத்த எம்எல்ஏ

கண் மருத்துவமனை

எந்த பகுதியில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற போட்டி கட்சிக்குள் நிலவி வரும் நிலையில், குஜராத்தில் நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

bjp membership drive in rajkot hospital

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ரன்சோதாஸ் பாபு டிரஸ்ட் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்குள் நள்ளிரவில் நுழைந்த பாஜகவினர், அங்கு கேடராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்து படுத்து தூக்கிக்கொண்டிருந்த நோயாளிகளை, ஒவ்வொருவராக எழுப்பி பாஜக உறுப்பினராக சேர்த்துள்ளனர்.

இந்த செயலை அங்கு அறுவை சிகிச்சை செய்திருந்த தும்மர் என்பவர் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்புரை அறுவை சிகிச்சைக்காக ராஜ்கோட்டிற்குச் சென்றேன்.

பாஜகவில் இணைந்து விட்டீர்கள்

அறுவை சிகிச்சைக்கு பின் உறங்கிக்கொண்டிருந்த என்னை ஒரு நபர் எழுப்பி எனது மொபைல் எண்ணைக் கேட்டார். அது மருத்துவமனைக்கு என்று நினைத்து கூறினேன். உடனே அவர் எனது தொலைபேசியை எடுத்து, அதில் வந்த OTP ஐக் குறித்துக்கொண்டார்.

bjp membership drive in rajkot hospital 

அதன்பின் எனது தொலைபேசியை நான் திரும்பப் பெற்றபோது, நான் பாஜக உறுப்பினராக இணைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. "என்னை பாஜகவில் இணைத்து விட்டீர்களா" என அவரிடம் கேட்ட போது, "ஆமாம். வேறு வழியில்லை" என பதிலளித்தார். இதே போல் அங்கிருந்த 250 பேர் பாஜக உறுப்பினராக்கப்பட்டுள்ளனர்" என கூறினார்.

விசாரணை

"எங்கள் டிரஸ்ட் மூலம் இலவச கண்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதை தவறாக பயன்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம். இதில் எங்களது டிரஸ்ட் உறுப்பினர் யாருக்கேனும் தொடர்பிருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மருத்துவமனை டிரஸ்ட் தலைவர் தெரிவித்துள்ளார். 


இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ராஜ்கோட் நகர பாஜக தலைவர் முகேஷ் தோஷி, "வீடியோவில் காணப்பட்ட நபரை அடையாளம் காண்பது உட்பட முழு விஷயத்தையும் விசாரிக்க எனது மண்டல செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். தூங்கும் நோயாளிகளை எழுப்பி உறுப்பினர்களாக்க யாருக்கும் அறிவுறுத்தப்படவில்லை. இதுபோன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.