குஜராத் அணி வெற்றி; ஹர்திக்கின் எல்லை மீறிய பேச்சு - கொந்தளித்த ரசிகர்கள்!
மும்பை - குஜராத் இடையேயான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
மும்பை - குஜராத்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் போட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது.
கொந்தளித்த ரசிகர்கள்
இதில் ரோகித் 43 ரன்களும், நமன் 20 ரன்களும், ப்ரவிஸ் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியின் டாஸ் நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா பெயரைக் கூறிய போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். இதனை அடுத்து பேசிய பாண்டியா, தான் பிறந்த இடம் குஜராத் என்றாலும் கிரிக்கெட்டில் தான் பிறந்தது மும்பை தான் என கூறினார். அவரது பேச்சு குஜராத் மக்களை சீண்டும் வகையில் இருந்ததால், ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக தொடர்ந்து கூச்சலிட்ட வண்ணம் இருந்தனர்.