WPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் சென்னை டாக்ஸி டிரைவர் மகள் - யார் இந்த சாதனை பெண்?
தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் அடுத்த சீசன் 2024ம் ஆண்டு மும்பை மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணனை (23) மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஸ்பின் ஆல்ரவுண்டரான அவரை அடிப்படை தொகையான ரூ.10 லட்சத்திற்கு மும்பை அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை கீர்த்தனா படைத்துள்ளார்.
டாக்ஸி ஓட்டுநர் மகள்
இந்நிலையில், யார் இந்த கீர்த்தனா பாலகிருஷ்ணன்..? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கீர்த்தனா. இவர் தமிழக அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி, அதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2021-22 பிரேயர் கோப்பையில், 34 என்ற சராசரி மற்றும் 86 ஸ்ட்ரைக் ரேட்டில் 102 ரன்கள் எடுத்துள்ளார். கீர்த்தனாவின் தந்தை சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிகிறார். மேலும், தமிழக வீரர் அபினவ் முகுந்தின் தந்தை டிஎஸ் முகுந்த் கிரிக்கெட் அகாடமியில் கீர்த்தனா பாலகிருஷ்ணன் பயிற்சி பெற்றவர் ஆவார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற கீர்த்தனா பாலகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.